கண்ணோட்டம்:
பெருநகர சென்னை மாநகராட்சி, ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிக்கான Logo (இலச்சினை) வடிவமைப்பதற்காக நகர்வாழ் மக்களின் ஆலோசனைகளைக் கேட்டதில் 30 வடிவங்கள் ஆன்லைனில் பெறப்பட்டன. அவை பெருநகர சென்னை மாநகராட்சியின் (GCC) www.chennaicorporation.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டன. பெறப்பட்ட 30 லோகோ வடிவங்களில் 7 வடிவங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றில் சிறந்ததைத் தேர்வு செய்வதற்காக மக்களிடையே ஆன்லைன் வாக்கெடுப்பு நடைபெற்றது
சிறந்த Logo (இலச்சினை) தேர்வு:
தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசீலக்கப்பட்ட இலச்சினை வடிவங்களிலிருந்து சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ஹீனா சௌஹான் என்பவர் வடிவமைத்த இலச்சினை தேர்வு செய்யப்பட்டது. படைப்புத் திறனிலும் பிராண்ட் டிசைன் எனப்படும் முத்திரை வடிவமைப்பிலும், செயலிகள் உருவாக்கத்திலும் அனுபவம் வாய்ந்தவர் ஹீனா. தேர்ந்தெடுக்கப்பட்ட இலச்சினை மூன்று நிறங்களில் பட்டைகளும், புள்ளிகள் கொண்ட ஒரு பட்டையும் உயர்ந்த சாம்பல் நிறக் கட்டிடங்களை வட்டவடிவத்தில் சுற்றியுள்ளது போல் அமைந்துள்ளது.
இந்த இலச்சினை ஸ்மார்ட் சிட்டியின் அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டது என்கிறார் வடிவமைப்பாளர். பச்சைப் பட்டை பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் சுற்றுசூழலையும், நீலப்பட்டை உறுதித்தன்மை மற்றும் மதிநுட்பத்தையும், சாம்பல் நிறப்பட்டை நவீன தொழில்நுட்பத்தையும் பிரதிபலிக்கின்றன.