- Log in to post comments
மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்காக தொடு உணர்வு முறையில் அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டதுதான் சென்சரி பூங்கா.
இப்பூங்காவில் நச்சுத்தன்மை அற்ற தாவரங்கள், சிலை மற்றும் சிற்ப வடிவங்கள், நடப்பதற்கும் நகர்வதற்கும் உதவும் கைப்பிடிகள், விளையாடவும் பொழுதுபோக்கவும் வசதியாக வடிவமைக்கப்பட்ட அலங்கார நீர்வீழ்ச்சிகள், நூலிழை தொடு அட்டைகள் (touch-pads) பெரிய கண்ணாடித் திரைகள், பார்வைத் திறனாளிக் குழந்தைகளுக்கான சமிக்ஞைக் குறியீடுகள் மற்றும் ஒலி அமைப்பு வசதிகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
சாந்தோம் பகுதியில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தை மாற்றுத் திறனுள்ள குழந்தைகளுக்கான முன்மாதிரிப் பூங்காவாக மாற்றியமைத்துள்ளது பூங்கா பிரிவு. இந்தப் பூங்கா 1500 சதுர மீட்டரில் சென்னை சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்கா மறுசீரமைப்புத் திட்டத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகவும், குழந்தைகளுக்கு ஒரு பொழுதுபோக்கு மையமாகவும் திகழும். இந்தப் பூங்காவின் தள அமைப்பு தொடு உணர்வுச் சாதனங்கள் மூலம் தனிக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்குப் பயிற்சி அளித்திடவும் விழிப்புணர்வை உருவாக்கிடவும் பெரிதும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சென்ஸரி பூங்கா – மக்களின் எதிர்பார்ப்புகள் பரவசம் நிறைந்த அனுபவங்களாக மாறும் வகையில் சமயோசிதமாக வடிவமைக்கப்பட்ட ஓர் புகலிடம். பெருநகர சென்னை மாநகராட்சியின் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்காகப் பிரத்தியேகமாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
சென்ஸரி பூங்காவில் பல்வேறு மாற்றுத்திறன் கொண்ட வெவ்வேறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் உரிய சாதனங்களும் உபகரணங்களும் பொருத்தப்பட்டுள்ளன.
குழந்தைகள் மகிழ்வுடனும், மிகுந்த ஈடுபாட்டுடனும் பயன் பெறும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் திறன் சார்ந்த பயிற்சித்திட்டங்களும் நடத்துவதற்கேற்ப சென்ஸரி பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது.
நலமும் வளமும் நிறைந்த சூழலில் வருகை புரிந்து கொஞ்சி விளையாடும் குழந்தைகள் தங்களை மறந்து அவர்களுக்கான பிரத்தியேக உலகில் மகிழ்ச்சியில் திளைத்திட உதவும் வகையில் சென்சரி பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது.